தமிழக வெற்றிக்கழகம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இருக்கின்றனர். 108 இடங்களில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆட்சி அமைக்க இன்னும் பத்து தொகுதிகள் தேவைப்படுகின்றன.அதற்கான ஆதரவு திரட்டுவதற்காக விஜய் சில கட்சிகளுக்கு ஆதரவு கடிதம் கொடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவு தர காங்கிரஸ் கட்சி முன் வந்திருப்பதாக தெரிகின்றது. இன்றைக்குள் காங்கிரஸ் கட்சி தங்களின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிப்போம் என கூறியிருக்கின்றனர்.
அநேகமாக காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு தருவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் நேற்று விஜய் ஆளுநரை சந்திப்பதற்காக கடிதம் அனுப்பியிருக்கிறார். மேலும் அந்த கடிதத்தில் தன் கட்சி 35 % வாக்குகளை பெற்று இருப்பதால் ஆட்சி அமைக்க அழைத்து விடுக்குமாறும், பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரங்கள் கால அவகாசம் கோரியும் கடிதம் அனுப்பியுள்ளார் விஜய்.
அந்த கடிதத்திற்கு பதிலளித்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லாகர், வாக்கு சதவீதத்தை விட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் தனக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார் ஆளுநர். சட்டசபையில் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆளுநர் என்ற முறையில் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்கும் முடியும் எனவும் தெரிவித்தார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.
இந்நிலையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை வருகிறாராம். கேரளாவில் இருந்து மதியம் 12 மணி அளவில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை வருகை தர இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அப்போது விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் கொடுப்பார் என தெரிகின்றது. சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி பரபரப்பான இந்த சூழலில் விஜய் ஆளுநரை சந்திக்க இருக்கின்றார். மறுபக்கம் காங்கிரஸ் கட்சி இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். தவெகவிற்கு ஆதரவு தருவது குறித்தான முடிவு இந்த ஆலோசனையில் நடைபெற்று வருகின்றது.
ஒருபக்கம் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வரும் நிலையில் மறுபக்கம் இன்று மாலை விஜய் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுக்க உள்ளார். மேலும் நாளை விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார். மேலும் சோஷியல் மீடியாக்களில் விஜய் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூட தகவல்கள் வந்தன.
ஆனால் காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது உறுதியாகி இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியதாக வந்த தகவல் வதந்தியாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையெல்லாம் தாண்டி அடுத்த ஒரு சில நாட்கள் தமிழ்நாடு அரசியலில் மிக முக்கியமான நாட்களாகும். விஜய்க்கு ஆதரவு தரப்போவது யார் ? திமுக -காங்கிரஸ் கூட்டணி உடைக்கின்றதா ? விஜய் முதலமைச்சராக பதவியேற்கப்போவது எப்போது ? துணை முதலமைச்சர் யார் ? என்பது போன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கு அடுத்த சில நாட்களில் பதில் கிடைக்கவுள்ளது.

