Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய்க்கு பதவிப்பிரமாணம் கூடாது.. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.. வழக்கறிஞர் கடிதம்!

விஜய்க்கு பதவிப்பிரமாணம் கூடாது.. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.. வழக்கறிஞர் கடிதம்!

Samayam Tamil 2 weeks ago

மிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசியல் சூழ்நிலை பரபரப்பாக மாறி உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முதலமைச்சராக பதவியேற்பு வழங்குவது குறித்து புதிய சர்ச்சை எழுந்து உள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்காமல் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பெரும்பான்மைக்கு 118 தேவை

உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஆர். கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு அனுப்பி உள்ள அந்தக் கடிதத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று உள்ளதை குறிப்பிட்டு உள்ளார். ஆனால், மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கை 118 என்பதால், அந்தக் கட்சிக்கு இன்னும் தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

11 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

மேலும், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளதால், சட்டப்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை இருப்பதால், அவரது கட்சியின் வலிமை 107 ஆக குறையும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இதனால், பெரும்பான்மையை அடைய மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் எனவும் அவர் கூறி உள்ளார்.

பதவிப்பிரமாணம் நடத்துவது சரியல்ல

அதனால், அரசியல் சாசன விதிமுறைகளுக்கு உட்பட்டு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகே விஜய்க்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் எனவும், அதற்கு முன்பாக பதவிப்பிரமாணம் நடத்துவது சரியல்ல எனவும் ஆளுநரிடம் அவர் வலியுறுத்தி உள்ளார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு

இதே நேரத்தில், பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் பிற கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்தது.

காங்கிரஸ் கட்சியினரை வசைபாடும் திமுகவினர்

இதனாலேயே திமுகவினர் காங்கிரஸை வசைபாட தொடங்கி இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தும் வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர், திமுகவினர் என இருகட்சி முக்கிய நிர்வாகிகளும் மாறி மாறி அறிக்கையை வெளியிட்டு வருகின்றன்றனர்.

விஜய்யின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

இந்த சூழ்நிலையில், வழக்கறிஞர் எழுதி உள்ள இந்தக் கடிதம், அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்து உள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சமாக இருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது குறித்து அனைவரும் கவனித்து வருகின்றனர்.

பதவிப்பிரமாணத்துக்கு நேரு அரங்கத்தில் ஏற்பாடு

மேலும் நாளை (மே 7 ஆம் தேதி) காலை 11.30 மணிக்கு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பதவியேற்பு விழா நேரு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் அரங்கத்தில் நடைபெற்றும் வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil