தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சியை அமைக்க தேவையான முழு பெரும்பான்மையை எட்டாததால் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால், விஜய் தலைமையிலான கட்சி தற்போது பிற கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது. காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. இதனால் பெரும்பான்மையை எட்டும் கணக்கு இன்னும் சிக்கலாகவே உள்ளது.
இந்த சூழலில், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் 2013 அரசியல் முடிவு தற்போது தமிழக அரசியல் விவாதங்களில் ஒப்பீடாக பேசப்படுகிறது. 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக முதலமைச்சரானார்.
ஆட்சிக்கு வந்த உடனே தனது முக்கிய வாக்குறுதியான ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர முயன்ற கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு தராததால், கொள்கை ரீதியாக பதவி விலகி 49 நாட்களில் தனது அரசை கலைத்தார். அதன் பிறகு நடைபெற்ற மறுதேர்தலில், மக்களிடம் நேரடியாக மீண்டும் ஆதரவு கோரி, 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
அதேபோன்ற அரசியல் சூழல் தற்போது தமிழகத்திலும் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை பெரும்பான்மை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், விஜய் முதல்வராக பதவியேற்று பின்னர் ராஜினாமா செய்து மறுதேர்தலை சந்திப்பாரா என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
ஆனால் அரசியல் விமர்சகர்கள் இதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கருதுகின்றனர். காரணம், தமிழக அரசியல் அமைப்பு மற்றும் தற்போதைய கூட்டணி கணக்குகள் டெல்லி மாதிரி நேரடி மறுதேர்தலுக்குச் செல்லும் நிலையை எளிதாக உருவாக்காது என்பதே அவர்களின் கருத்து.
எனினும், விஜய் தலைமையிலான தவெக அடுத்த சில நாட்களில் எடுக்கும் முடிவுகள் தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாக இருக்கும் என்பது உறுதி. தற்போது கவனம் முழுவதும் 118 என்ற எண்ணிக்கையிலும், அதனை எட்ட விஜய் எப்படிப்பட்ட அரசியல் முடிவெடுக்கிறார் என்பதிலும் திரும்பியுள்ளது.
Seithi Punal
