டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று இன்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெறத்து.இதில், 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.
இந்த விருது விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 07 பேர் உட்பட இந்தியா முழுவதும் 66 பேருக்கு முதல்கட்டமாக இன்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கு 131 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு அடுத்த விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இன்றைய விருது விழாவில் பத்ம விருதுகள் வென்ற தமிழத்தை சேர்ந்தவர்கள் கீழ்வருமாறு;
01. டாக்டர் கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி
இவர் மருத்துவத் துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, புகழ்பெற்ற இரைப்பை குடல் நிபுணரான இவருக்கு 'பத்ம பூஷன்' விருது வழங்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இரைப்பை குடல் மருத்துவத் துறையை நிறுவினார். அதேப்போன்று, ராமகிருஷ்ண மடத்தின் மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னார்வச் சேவை புரிந்து வரும் இவர், தனது சொந்த கிராமமான கல்லிப்பட்டியின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தியுள்ளார். அத்துடன், 2007-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2022-இல் உலக இரைப்பை குடல் அமைப்பின் மிக உயரிய விருதான 'மாஸ்டர்ஸ் அவார்டும்' பெற்ற பெருமைக்குரியவர்.
02. டாக்டர் எச்.வி. ஹண்டே
மருத்துவச் சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறந்து விளங்கிய 99 வயது மூத்த மருத்துவர் டாக்டர் எச்.வி. ஹண்டேவுக்கு 'பத்மஸ்ரீ விருது' வழங்கப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான (1980-1986) இவர், போலியோ மற்றும் தட்டம்மை நோய்களை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றியதோடு 'டாக்டர் பி. சி. ராய் விருதையும்' பெற்றுள்ளார். அத்துடன், கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதுடன் பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
03. ஆர். கிருஷ்ணன் கிட்னா
நீலகிரி மாவட்டத்தின் ஆலு குறும்பர் சமூகத்தின் பாரம்பரிய 'அஜிலே பொட்டு' ஓவியக்கலையை இயற்கை நிறங்களைப் பயன்படுத்தி மீட்டெடுத்துப் பிரபலப்படுத்திய ஆர். கிருஷ்ணன் கிட்னாவுக்கு கலைத் துறையில் பங்காற்றியமைக்காக அவரது மறைவுக்குப் பின் 'பத்மஸ்ரீ விருது' வழங்கப்பட்டது. பழங்குடியின வனம் சார்ந்த மரபுகள் மற்றும் கதை சொல்லும் கலையைப் பாதுகாப்பதில் இவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்து, 2025-ஆம் ஆண்டு தனது மறைவு வரை கலைப் பயிற்சி அளிப்பதில் உறுதியாக இருந்தார்.
04. கே. விஜய் குமார்
மத்திய ரிசர்வ் காவல் படையின் முன்னாள் தலைமை இயக்குநரான திரு கே விஜய் குமாருக்கு, பொதுச் சேவைக்காக 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. இவர் நக்சல் தீவிரவாத ஒழிப்பு, வீரப்பனைப் பிடிப்பதற்கான சிறப்பு அதிரடிப் படைத் தலைமை, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு மேலாண்மை, 26/11 மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு உத்திசார் பிரிவை உருவாக்கியது எனப் பல்வேறு பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
05. எழுத்தாளர் சிவசங்கரி
இலக்கியத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பங்களித்து வரும் இவருக்கு 'பத்மஸ்ரீ விருது' வழங்கப்பட்டது. 18 இந்திய மொழிகளின் படைப்புகளைத் தொகுத்து, 16 ஆண்டுகள் உழைப்பில் இவர் உருவாக்கிய "நிட் இந்தியா த்ரூ லிட்ரேச்சர்" என்ற நூல் தேசிய ஒருமைப்பாட்டிற்கான ஒரு பெரும் சாதனையாகும்.
06. டாக்டர் ஆர் ஸ்ரீதர்
"இந்திய சமூக வானொலியின் தந்தை" என்று அழைக்கப்படும் மூத்த வானொலி ஒலிபரப்பாளர் இவர், டாக்டர் ஆர் ஸ்ரீதருக்கு 'பத்மஸ்ரீ' வழங்கப்பட்டது. இவர் இந்தியாவின் முதல் சமூக வானொலி நிலையத்தை வடிவமைத்ததுடன், ஞானவாணி மற்றும் ஞான தர்ஷன் ஆகியவற்றைத் தொடங்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
07. என். சுவாமிநாதன்
தமிழ் இசை மற்றும் பக்தி இலக்கியத் துறையில், 55 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் பண் இசையில் திருமுறை பாடி வரும் புகழ்பெற்ற ஓதுவர் என். சுவாமிநாதன் 'பத்மஸ்ரீ' விருது பெற்றார். இவர் பல கோவில்களில் ஓதுவராகப் பணியாற்றிய இவர், 26 ஆண்டுகள் திருத்தணி முருகன் கோவிலில் இசைப் பணியாற்றியுள்ளார். தேவாரப் பாடல்களைப் பாடுவதில் வல்லவரான இவர், உலகெங்கிலும் பல நாடுகளில் கச்சேரிகள் செய்துள்ளார்.

