தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள லாரி நிறுத்தப் பகுதியில், விற்பனைக்காக லாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை பைபாஸ் சாலையில் உள்ள லாரி நிறுத்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் சோதனை நடத்தியபோது, கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரியில் இருந்த 2 பேரையும் காவலர்கள் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர்கள் ஏரல் மாறமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜின் மகன் பொன்செல்வம் (22) மற்றும் தூத்துக்குடி பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் அசோக்குமார் (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் லாரியும் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள், கைதான இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாரிடம் இருந்து பெறப்பட்டது, இதன் பின்னணியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Seithi Punal
