Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"சினிமாவை ஒருபோதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்" - யாஷ் அறிவுரை

"சினிமாவை ஒருபோதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்" - யாஷ் அறிவுரை

'கே.ஜி.எஃப்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்ஸிக்'.

கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் யாஷ் ரசிகர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மேடைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட சவுண்ட் பாக்ஸ் மற்றும் விளக்குகள் பொருத்தப்பட்ட கனரக அமைப்பு திடீரென மாணவர்கள் மீது சரிந்து விழுந்தது. இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்தை கவனித்த யாஷ் உடனடியாக தனது பேச்சை நிறுத்தி, மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றும், அவர்களின் நிலை என்ன என்றும் கேட்டறிந்தார். அமைப்பாளர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்த பின்னர், பெரிய பாதிப்பு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

அப்போது பேசிய யாஷ், 'டாக்ஸிக்' படத்தின் இயக்குநர் கீது மோகன்தாஸ் ஒரு பெண் என்பதால் பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். "ஒரு பெண் இந்த சமூகத்தில் சாதிப்பது பல மடங்கு கடினம். 'ஒரு பொண்ணு என்ன செய்யப் போகிறது?' போன்ற வார்த்தைகளை நானே கேட்டிருக்கிறேன். அந்த எண்ணங்களை உடைத்து, பெண்களும் தங்களுடைய எண்ணங்களையும் பார்வையையும் வெளிப்படுத்தி வெற்றி பெற முடியும் என்பதை கீது மோகன்தாஸ் இந்த படத்தின் மூலம் நிரூபிப்பார்" என்றார்.

மேலும், கே.ஜி.எஃப் படத்திற்குப் பிறகு தன்னிடம் பணம் முக்கியமல்ல என்றும், தனது பணியின் மூலம் மதிக்கப்பட வேண்டும் என்பதே விருப்பம் என்றும் யாஷ் கூறினார்.

"எனக்கு பணம் தேவையில்லை. நீங்கள் ஏற்கனவே எனக்கு நிறைய கொடுத்திருக்கிறீர்கள். என்னை பணத்தால் மதிப்பிட வேண்டாம்; என்னுடைய வேலையால் மதிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இந்த படத்தில் பெண்களுக்கான வலிமையான குரல் இருக்கிறது. டிரைலரில் படம் எப்படி தெரிகிறதோ, அதைவிட வித்தியாசமாக இந்த படம் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

இறுதியாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய யாஷ், "சினிமாவை ஒருபோதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாங்கள் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை. வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை கனவாகக் கொண்டு உழையுங்கள். மரியாதையும் வெற்றியும் உங்களைத் தேடி வரும்" என்று கூறினார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal