Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Jothimani: "அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான்" -ஜோதிமணி எம்.பி

Jothimani: "அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான்" -ஜோதிமணி எம்.பி

Jothimani : 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய தமிழக வெற்றிக்கழகம் (TVK) இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியை அறுவடை செய்துள்ளது.

2024, பிப்ரவரியில் கட்சியை தொடங்கிய விஜய் அடுத்த 2 ஆண்டுகளில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கி 108 இடங்களை கைப்பற்றி இருக்கிறார். ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. பெரும்பான்மையை எட்ட இன்னும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க கட்சி சில நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. சட்டமன்றத்தில் மட்டுமின்றி அடுத்து வரவுள்ள உள்ளாட்சி, மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களிலும் த.வெ.க - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக தரப்பில் இருந்து காங்கிரஸ் மீது காட்டமான விமர்சனங்கள் முன்வைப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும். " எனத் தெரிவித்துள்ளார்.

: விஜயின் வெற்றியை கொண்டாடும் பூர்வீக கிராம மக்கள்.. தமிழ்நாட்டுக்கு 3வது முதல்வரை கொடுத்த ராமநாதபுரம் மாவட்டம்..!


நாங்கள் திமுகவை காட்டமாக விமர்சிக்கவில்லை

இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் தளப்பதிவில், "நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஏற்ற ,இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன். இப்பொழுது தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது.அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான். திமுக கூட 2014 ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரம் முன்பு நீண்ட கால கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றியிருக்கிறது. நாங்கள் திடீரென தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதற்காக நாங்கள் திமுகவை காட்டமாக விமர்சிக்கவில்லை. அது ஒரு அரசியல் நிலைப்பாடு என்றே புரிந்துகொண்டோம்.

இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நாம் பரஸ்பரம் மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது. இருபுறமும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக திமுக தேர்தலில் தோல்வியடைந்திருக்கிற சூழ்நிலையில் அதுவும் முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே தோல்வியடைந்திருக்கிற நிலையில் ,நேற்றுவரை கூட்டணியில் இருந்துவிட்டு அதுகுறித்து மிகுந்த காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமோ,காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமோ அல்ல.

: மகளிர் உரிமைத் தொகை ரூ.2500.. 6 இலவச கேஸ் சிலிண்டர்கள்.. விஜய் போடப்போகும் முதல் கையெழுத்து எது?

காங்கிரஸ் கட்சியும். தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம்.அதற்கு தேசிய அளவில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதற்காக யாரும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை நடத்த முடியாது.

அதே போல எமது தலைவர் ராகுல் காந்திக்கு நாங்கள் யாரிடம் இருந்தும் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டில் பாஜகவின் பாசிச ஆட்சியை ஆட்சியை சமரசமற்று எதிர்த்து வீழ்த்தக்கூடிய வல்லமை உள்ள ஒரே தலைவர் அவர்தான் என்பதை நாடறியும். அவரை அவதூறு செய்வது யாராக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்கவோ பார்த்துக்கொண்டிருக்கவோ மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அரசியலில் ஏற்கனவே இருந்த கூட்டணிகள் பிரிவதும்,புதிய கூட்டணிகள் உருவாவதும் இயல்பானதுதான் என்கிற அரசியல் புரிதலோடு தமிழ்நாட்டின் நலனையும்,எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பயணத்தில் முன்னகர்வோம்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi