Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எம்.பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி?.. விருப்பம் தெரிவித்த முதல்வர் விஜய்.. இதுதான் காரணம்!!

எம்.பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி?.. விருப்பம் தெரிவித்த முதல்வர் விஜய்.. இதுதான் காரணம்!!

TV9 Tamil 1 month ago
சென்னை, ஜுன் 4:தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் இடத்தை, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த இடத்திற்குப் பிரபல பொருளாதார வல்லுநரும் தரவு ஆய்வாளருமான பிரவீண் சக்கரவர்த்தி போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சரான சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழ்நாட்டில் ஒரு ராஜ்யசபா இடம் காலியானது. இந்நிலையில், நாடு முழுவதும் காலியாக உள்ள 24 மாநிலங்களவை இடங்களுக்கு  வரும் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.

முதல்வர் விஜயுடன் காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை:

மாநிலங்களவை இடத்திற்கான வேட்பாளரைத் தாவேகா அறிவிக்காமல் இருந்த நிலையில், அந்த இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், காங்கிரஸின் கோரிக்கையை முதல்வர் விஜய் பரிசீலிப்பதாகக் கூறியதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் காலியான மாநிலங்களவை உறுப்பினர் இடம், கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா இடத்தை பெற்றிருந்த காங்கிரஸ், தேர்தலுக்குப் பிந்தைய தவெக கூட்டணியிலும் ஒரு இடத்தைப் பிடித்துள்ளதன் மூலம், மாநிலங்களவையில் அக்கட்சியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

வேட்பாளராகக் களமிறங்கும் பிரவீன் சக்கரவர்த்தி?

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் சென்னையைச் சேர்ந்த பிரவீண் சக்கரவர்த்தி போட்டியிட உள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறந்த பொருளாதார வல்லுநரான இவரது பின்னணி விபரங்கள். கல்வி மற்றும் பணி: அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் 'வார்டன்' (Wharton) பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றவர். ஐபிஎம் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மத்திய திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பணியாற்றியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலின்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் இணைந்து காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிலும் பங்காற்றியுள்ளார். நிதித்துறை மற்றும் தரவு மேலாண்மை நிபுணரான இவர், 2019 முதல் பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகம் வகுப்பது மற்றும் வாக்குச்சாவடி அளவிலான தரவுகளைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

முதல்வர் விஜய் விரும்பியதற்குக் காரணம்?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக மற்றும் காங்கிரஸ் இடையே வெற்றிகரமான கூட்டணி அமைவதற்குக் பிரவீண் சக்கரவர்த்தி முக்கியக் காரணியாக விளங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாகவே, அவருக்கு இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க முதலமைச்சர் விஜய் பெரிதும் விரும்பியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil