Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தீபாவளி பட்டாசு: ஆஸ்துமா நோயாளிகளும் செல்லப் பிராணிகளும் தப்பிக்க 5 வழிகள்!

தீபாவளி பட்டாசு: ஆஸ்துமா நோயாளிகளும் செல்லப் பிராணிகளும் தப்பிக்க 5 வழிகள்!

Kalki Online 1 week ago

தீபாவளி பண்டிகையின் பொழுது பட்டாசுகளின் புகையால் காற்று மாசுபாடும், அதிக சத்தத்தில் பட்டாசுகளை வெடிக்க விடுவதால் ஒலி மாசுபாடும் ஏற்படுகிறது.

பட்டாசுகளில் இருந்து வெளியாகும் புகை மற்றும் சத்தம் ஆஸ்துமா நோயாளிகளுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். வெடிப்புகையில் சல்பர் மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு ரசாயனங்கள் உள்ளன. ஏற்கனவே நம் நாட்டில் காற்று மாசடைந்துள்ளது. அத்துடன் பட்டாசுப் புகையும் சேரும் பொழுது காற்றின் தரம் இன்னும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இம்மாதிரியான சமயங்களில் ஆஸ்துமா நோயாளிகளும், செல்லப் பிராணிகளும் பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சில உள்ளன.

 Deepavali Crackers Smoke | பட்டாசுப் புகை

ஆஸ்துமா நோயாளிகளுக்கான 5 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1. இன்ஹேலரை கைவசம் வைத்திருப்பது:

மருத்துவர் பரிந்துரைத்த அவசர காலத்திற்குத் தேவையான இன்ஹேலர் (Inhaler) மற்றும் மருந்துகளை எப்பொழுதும் உடனே எடுக்கும்படி அருகில் வைத்திருப்பது நல்லது. அத்துடன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சுவாச மண்டலத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். அதிகப்படியான கொழுப்பு நிறைந்த இனிப்புகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தி ஆஸ்துமாவை மோசமாக்கலாம்.

2. வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பது:

அதிக ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளை விட அதிக காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக இருக்கும் பாம்பு மாத்திரை, மத்தாப்பு, சாட்டை போன்றவை தான் நுரையீரல் பிரச்சினைகளை அதிகப்படுத்தும். எனவே பட்டாசு வெடிக்கும் நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களை இறுக்கமாக மூடி விட்டு வீட்டிற்குள்ளேயே இருப்பது தேவையற்ற நச்சுப் புகைகளை சுவாசிப்பதை தவிர்க்க உதவும். அத்துடன் சுவாசப் பயிற்சிகள் மேற்கொள்வது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

3. முகக்கவசம் அணிவது:

தவிர்க்க முடியாமல் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தால், நச்சுப் புகையிலிருந்து தப்பிப்பதற்கு தரமான N95 முகக்கவசத்தை அணிவது நல்லது. இது தீங்கு விளைவிக்கும் மாசுகள் நுரையீரலுக்குச் செல்வதை தடுக்க உதவும்.

4. காற்று சுத்திகரிப்பான் (Air Purifier):

வீட்டின் உள்ளே இருக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்த ஏர் பியூரிஃபையரைப் பயன்படுத்தலாம்.

5. உடனடி மருத்துவ உதவி:

மூச்சுத்திணறல், இருமல் அல்லது நெஞ்சு இறுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சுடுதண்ணீர் மற்றும் ஆவி பிடிப்பது போன்றவை தற்காலிக நிவாரணம் தரும்.

செல்லப் பிராணிகளுக்கான 5 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1. பாதுகாப்பான தனி அறை:

பட்டாசு சத்தம் குறைவாகக் கேட்கும் படியான வீட்டின் உட்பகுதியில் ஒரு உள்ளறையில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வைத்துக்கொள்ளலாம்.

2. ஜன்னல்களை மூடுவது:

பட்டாசு சத்தம் மற்றும் வெளிச்சம் பிராணிகளை மிரளச் செய்யும் என்பதால் பட்டாசு வெடிக்கும் சத்தமும் வெளிச்சமும் உள்ளே வராதவாறு ஜன்னல்களை மூடி, தடிமனான திரைச்சீலைகளைத் தொங்க விடலாம்.

3. கவனத்தை திசை திருப்புவது:

டிவி அல்லது இசையை மிதமான சத்தத்தில் வைத்து, பட்டாசு சத்தத்திலிருந்து அவற்றின் கவனத்தை சற்று திசை திருப்பலாம்.

4. அடையாள அட்டை (Collar Tag):

சத்தத்தால் பயந்து செல்லப்பிராணிகள் ஓடிவிட வாய்ப்புள்ளதால் அவற்றின் கழுத்துப் பட்டியில் நம் வீட்டு முகவரி மற்றும் போன் நம்பர் அடங்கிய டேக் ஒன்றை மாட்டியிருக்க வேண்டியது அவசியம்.

5. உணவு மற்றும் தண்ணீர்:

பட்டாசு வெடிக்கத் தொடங்குவதற்கு முன்பே அவற்றிற்கு தேவையான உணவை வழங்கி விட வேண்டும். பயத்தில் இருக்கும் பொழுது குடிக்க நல்ல தண்ணீரை அருகில் வைக்க வேண்டும். அதிகம் பயத்தால் நடுங்கினால் மருத்துவரின் ஆலோசனையுடன் அமைதிப்படுத்தும் மருந்துகளைத் தரலாம்.

சிவகாசி ஆன்லைன் பட்டாசு மோசடி: தீபாவளிக்கு பணத்தை இழக்காமல் தப்பிப்பது எப்படி?

சில பட்டாசுகள் அதிக சத்தத்தை ஏற்படுத்தும். வேறு சில பட்டாசுகளோ அதிக அளவிலான புகையை ஏற்படுத்தும். பாம்பு மாத்திரை, மத்தாப்பு போன்றவை அதிக புகையை வெளியிடும். இது உடலுக்கு நல்லதில்லை. நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் இருக்கும்போது மத்தாப்பு போன்ற இந்த அதிக புகையை வெளியிடும் பட்டாசுகளை கொளுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை பட்டாசு கொளுத்துவதாக இருந்தாலும் வீட்டுக்குள் வைத்து கொளுத்தாமல் நல்ல காற்றோட்டமான இடத்தில் மட்டுமே கொளுத்துவது நல்லது. அத்துடன் அதிகப் புகை வெளியிடாத பட்டாசுகளை வாங்குவதும் சிறப்பு. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து தீபாவளியை பொறுப்புடன் கொண்டாடுவோம்.

சாதாரண பட்டாசுகளுக்கு மாற்றாக வந்துள்ள பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாப்பானவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Reference:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online