Dailyhunt
திருமாலுக்கே மாமனார் ஆனவர்!

திருமாலுக்கே மாமனார் ஆனவர்!

Kalki Online 1 year ago
 வேடுவப் பெண்ணாகத் தோன்றி திருவருள் செய்த செஞ்சு லட்சுமி!

திருவான மஹாலக்ஷ்மி தாயாரிடமிருந்து கிடைக்கப்பெறுவதுதான் 'திருவருள்.' திருவை விட்டு திருமால் பிரியவே மாட்டார்.

அதேபோலதான், அந்தத் திருமாலை விட்டு திருவான தாயாரும் பிரியவே மாட்டாள்.

பரம்பொருளான அந்தத் திருமாலுக்கு அடையாளமாக, லக்ஷ்ணமாக இருந்து கொண்டு திருமாலின் 5 நிலைகளிலும் அப்பெருமாளோடு சேர்ந்தே இருந்து நம்மை எல்லாம் குளிரக் குளிர காப்பதற்காகவே காத்துக்கொண்டிருப்பவள் திருமகள்தான். பர, வ்யூஹ, விபவ, அர்ச்சா, அந்தர்யாமி என்பதே அந்த ஐந்து நிலைகள். பர நிலையில் அதாவது பரமபதத்தில், 'யஸ்யா வீக்ஷ்ய முகம்' என்று திருமகளின் பார்வை செல்லும் வழியை மார்க்கமாகக் கொண்டுதான் திருமால் இவ்வுலகையே சிருஷ்டிக்கிறாராம். அடுத்தது, வ்யூஹ நிலையில், திருப்பாற்கடலில் அந்தப் பரந்தாமனோடு சேர்ந்தே பாம்பணை மேல் இருக்கிறாள் திருமகள். விபவ நிலை என்பது திருமால் திருஅவதாரங்கள் செய்யும் நிலை. இந்த அவதாரக் காலங்களிலும் கூடவே இருக்கிறாள், இருந்திருக்கிறாள் திருமாலை விட்டுப் பிரிந்தறியா திருமகள். நான்காவது நிலை, அந்தர்யாமி நிலை. நம் அனைவரது இதயக்குகைக்குள்ளும், அணுவுக்குள் அணுவாக நம் உள்ளங்களிலும் உறைகின்றாள் லோகேஷ்வரியான திருமகள். ஐந்தாவது நிலை என்பது அர்ச்சா நிலையாகும். அதாவது, திருக்கோயில்களில் திருமாலின் திருமார்பில், திருமாலின் மருவாகவே இருக்கிறாள் திருமகள்.

திருமால் மீது அதீத பக்தி கொண்டவர்களை திருமகளுக்கு ரொம்பவும் பிடிக்கும். திருமகளின் மீது அலாதி பக்தி கொண்டவர்களை திருமாலுக்கு பிடித்துப்போகும். ஆனால், திருமாலை பிடிக்க, நாம் முதலில் பிடிக்க வேண்டியது திருமகளின் திருவடியைத்தான். திருமாலின் மீது அதிக பிரியத்தை வைத்தவர்களின் மீது, தான் பிரியம் கொண்டு அவர்களுக்கு தானாகவே மகளாக வந்து திருமாலின் கரத்தை பிடித்த கதைகளும் நிறைய உண்டு. கண்ணனின் மீது கண்மூடித்தனமான பக்தி கொண்ட பெரியாழ்வாரின் பக்தியில் மயங்கித்தானே அவருக்கு மகளாக, ஆண்டாளாக அவதரித்து அந்தத் திருமாலின் கரத்தைப் பிடித்து பெரியாழ்வாரை அந்த அரங்கனின் மாமனாராக்கிய பெருமை ஆண்டாளையே சாரும். கண்கண்ட தெய்வமான திருமலையப்பனின் மாமனாராகிய பெருமையைப் பெற்றவர் அனந்தாழ்வான். பக்தியோடு பூக்களை, திருமலையப்பனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஓரே குறிக்கோளோடு தன் நிறைமாத கர்ப்பிணி மனைவியோடு வனமாய் இருந்த திருமலை மேல் ஒரு நந்தவனத்தை, முதல் நந்தவனத்தை அமைத்த அனந்தாழ்வாரை, தன் அப்பாவாகவே பாவித்த அலர்மேல் மங்கையின் கருணையை என்னவென்று சொல்வது?

'திருமகள் திருவருளில்' அந்த ஏழுமலையானின் லீலையைப் பற்றி நம்மை எல்லாம் இதோ சிந்திக்க வைத்துக்கொண்டிருப்பதும் அந்த ஏழுமலையானின் திருமார்பில் உறையும் திருமகளின் அருள்தானே? பாருலகை பாதுகாத்து வருபவனுக்காக, பார்த்து காத்து தம் ஆசார்யரான ஸ்வாமி ராமானுஜரின் திருப்பெயராலேயே தாம் அமைத்த ஸ்ரீ ராமானுஜ நந்தவனத்திலிருந்து பூ பறித்து, அந்தப் பூக்களை கொண்டு தினம் அழகான மாலைகளை அந்தத் திருமலையப்பனுக்கு சமர்ப்பித்து வந்த அனந்தாழ்வான், ஒரு நாள் இளங்காலை பொழுதில், தம் தோட்டத்திற்குள் ஆசையாக நுழைந்தபொழுது, அங்கே சிந்தி இருந்த பூக்களும், வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்ட செடிகளும், அவரை அதிர்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் சென்றது.

கோமளவல்லி தாயாரின் அருள் பெற்ற லட்சுமி குமாரர்!

''யார் இப்படி எல்லாம் செய்தார்கள்? இந்தத் தோட்டத்தில் வந்து இப்படிச் செடிகளையும், மலர்களையும் கொய்து விட்டுச் செல்லும் தைர்யம் யாரிடம் இருக்கிறது?'' என எல்லோரிடமும் அதட்டலாய் கேட்டுப் பார்த்தார் அனந்தாழ்வார். "எங்களுக்கு எதுவும் தெரியாது, நாங்கள் யாரையும், எதையும் பார்க்கவில்லை" என்ற பதில்தான் அவருக்கு ஒருசேர அனைவரிடமிருந்தும் வந்தது. "இந்த வேலையை செய்தது யார் என இதோ கண்டுபிடித்து அவர்களுக்கு அதற்கான தண்டனையைக் கொடுக்கிறேன்" என கூறியபடியே வசந்த காலத்தின் ஒன்பதாவது நாளான அந்த நடு இரவு நந்தனவத்திற்குச் சென்று மலர்களைத் திருடுபவர்களை கையும் களவுமாகப் பிடிக்கக் காத்துக் கொண்டிருந்தார் அனந்தாழ்வார்.

நடு நிசி கடந்த நேரத்தில் வெகு அழகான, செல்வந்தர்களைப் போல தோற்றம் அளிக்கும் ஒரு தம்பதி ராஜ களையுடன், அந்த நந்தவனத்திற்குள் நுழைந்து, ஒருவர் மீது ஒருவர் அங்கிருந்த செடிகளிலிருந்து பூக்களை பறித்து எறிந்து கொண்டு விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார் அனந்தாழ்வார். சத்தம் போடாமல், சத்தம் போட்டு விளையாடும் அத்தம்பதியின் பின்னே சென்று அங்கிருந்த ஒரு செண்பக மரத்தில் அவர்களை அப்படியே கட்டிப்போட அனந்தாழ்வார் முயற்சி செய்தபோது, ராஜகுமாரனை போல வந்த அந்தத் திருமலை அரசன் தப்பித்து விட, திருமலை அரசி மட்டும் அவரிடம், அவரின் கயிற்றில் மாட்டிக்கொண்டு செண்பக மரத்தோடு கட்டப்பட்டு விட்டாள்.

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அனந்தாழ்வாரின் பக்திக்குக் கட்டுப்பட்டே திருமகள் செண்பக மரத்தில், தானே ஆசைப்பட்டு அனந்தாழ்வாரின் கைகளால் கட்டுண்டு இருப்பது அவருக்கேத் தெரியாது. "யாரம்மா நீ? எதற்காக இந்தத் தோட்டத்தை இப்படிச் செய்தீர்கள்?" என்று அனந்தாழ்வார் கேட்க, அதற்குக் கண்ணீர் மல்க திருமகளோ, "ஸ்வாமி, நான் உங்கள் மகளைப் போன்றவள். எனக்கு ஒன்றுமே தெரியாது. என் கணவர் சொல்லித்தான் நான் இங்கு வந்தேன்" என்று கூற, "உன்னைத் தேடி உன் கணவர் இங்கே நாளை வருவான் அல்லவா? அப்போது அவனையும் பிடித்துக் கட்டிப் போடுகிறேன்" என்று காத்திருந்தார் அனந்தாழ்வார்.

அடுத்த நாள் காலை பெருமாளின் சன்னிதியில் திருமாலின் திருமார்பில் திருமகளைக் காணாமல் தவித்துப்போய் விட்டார்கள் அர்ச்சக ஸ்வாமிகள். அப்போது நடந்த அத்தனை விஷயங்களையும் எடுத்துச் சொல்லி அர்ச்சகர்களை அனந்தாழ்வான் வசிக்கும் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தான் ஆனந்த நிலைய வாசனான சீனிவாசன்.

அர்ச்சகர்களின் வழி அனைத்தையும் அறிந்த அன ந்தாழ்வார் அழுது புலம்பி திருமகளிடம் மன்னிப்பு கேட்டார். திருமகளோ, சிரித்துகொண்டே, "நீர் எனக்கு தந்தை போன்றவர். இதோ என்னை மணப்பெண் போல் அலங்கரித்து ஒரு கூடையில் வைத்து திருமணக் கோலத்தில் அந்தத் திருமலையப்பனிடம் கொண்டு போய் சேர்த்திடுங்கள்" என அன்புக் கட்டளையிட, திருவின் தகப்பனாராக மாறினார் அனந்தாழ்வார்.

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

'மலையில் வேங்கடவர்க்கு மாமனார் வாழியே... அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே' என்று அனந்தாழ்வாரின் வாழி திருநாமம் இன்றளவும் திரும்பிய திக்கெல்லாம் ஒலித்துக்கொண்டு திருமகளின் திருவருளை பறைச்சாற்றி கொண்டு இருக்கிறது.

(இந்தத் 'திருமகள் திருவருள்' தொடர் வெள்ளிதோறும் இடம்பெறும்.)

திருமகள் திருவருள் - அனைத்து அத்தியாயங்களையும் படிக்க 'Click Here'

Click Here
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online