சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஷேக்மேட் மதுபான விடுதி மேற்கூரை இடிந்த விபத்தில் விடுதியின் உரிமையாளர் அசோக் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் ஷேக்மேட் தனியார் மதுபான விடுதி இயங்கி வருகிறது. நேற்று (மார்ச் 28) இரவு விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மணிப்பூரை சேர்ந்த ஊழியர்கள் மேக்ஸ் (வயது 22), திருநங்கை லல்லி (வயது 22) சைக்கோள் ராஜ் (வயது 48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர் ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மதுபான விடுதியை ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி சார்பில் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.
மதுபான விடுதி அருகில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், மெட்ரோ நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "மெட்ரோ ரயில் பணிகளால் ஷேக்மேட் மதுபான விடுதியில் விபத்து ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 240 அடி தொலைவில் தான் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், விபத்து ஏற்பட்டபோது அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை.
மெட்ரோ அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மீட்பு பணிகள் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மெட்ரோ அதிகாரிகள் உதவி செய்து வருகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதியில் பணியாற்றிய 10 பேரிடம் அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உரிமையாளர் அசோக் மீது 304 ஏ பிரிவின் (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அசோக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
செல்வம்
ஹெல்த் டிப்ஸ்: வறட்சியைத் தவிர்க்க… அருந்த வேண்டிய பானங்கள் இதோ..!

