Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விசிக கட்சிக்கு திமுக ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லையா ? தெளிவாக பதிலளித்த திருமாவளவன்

விசிக கட்சிக்கு திமுக ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லையா ? தெளிவாக பதிலளித்த திருமாவளவன்

Samayam Tamil 2 months ago

விசிக கட்சி தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கின்றார். தற்சமயம் திமுக ஒரு குழு அமைத்து தோழமை கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதன்படி காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து இழுபறியாக சென்றுகொண்டிருந்த தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமான முடிவிற்கு வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக 28 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாகவும் முடிவிற்கு வந்தனர்.

இதற்கு உடன்பட்டு காங்கிரஸ் கட்சி தொகுதிப்பங்கீட்டில் கையெழுத்திட்டனர். அதனைத்தொடர்ந்து மதிமுக, விசிக, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை குழு தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கிடையில் திமுக கூட்டணியில் புதிதாக இணைந்திருக்கும் தேமுதிக கட்சிக்கு அவர்கள் ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கி இருக்கின்றனர்.

இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் காங்கிரஸ்கட்சிக்கு கொடுக்கும் முன்னுரிமையை திமுக மற்ற தோழமை கட்சிகளுக்கு தருகின்றனரா ? என சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஒரு சிலர் இந்த விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அதாவது நீண்ட காலமாக திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் விசிக கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் கூட கொடுக்காத நிலையில் நேற்று வந்த தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுத்திருக்கின்றனர் என சிலரால் பேசப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து செய்தியாளர்கள் விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்டனர். அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்பட்டது. முன்பு திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த தேமுதிகவிற்கு தற்போது ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளனர். ஆனால் விசிகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்காதது ஏன் ? என திருமாவளவனிடம் கேட்டனர்.

அதற்கு அவர், இன்னும் எங்களின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவிற்கு வரவில்லை. இன்னும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நாங்கள் துவங்கவில்லை. பேச்சுவார்த்தை முடியாத நிலையில், தொகுதிப்பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்காத நிலையில் இதற்கு பதிலளிக்க முடியாது. தொகுதிப்பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுத்த பிறகு இந்த கேள்வியை கேட்டால் அதற்கு பதிலளிக்கலாம். ஆனால் தற்போது இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றார் திருமாவளவன்.

இதன் மூலம் திமுகமற்றும் விசிக கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என தெரிகின்றது. அதைப்போல தான் கமலின் மக்கள் நீதி மையம், வைகோவின் மதிமுக ஆகிய கட்சிகளுடனும் திமுக இன்னும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. எனவே முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகின்றது.

இந்நிலையில் நேற்றிலிருந்து விஜய்யின் தவெக கட்சியின் வாக்குறுதிகள் குறித்து தான் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. மற்ற கட்சிகளின் வாக்குறுதிகளை விமர்சித்த விஜய்யின் வாக்குறுதிகளும் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகின்றன. மேலும் திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளின் சாயல் தவெக வாக்குறுதியில் இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

இதுகுறித்து பலரிடம் கருத்து கேட்கப்பட்டு வரும் நிலையில் திருமாவளவனிடமும் இதைப்பற்றி கருது கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புலியை பார்த்து பூனை கோடுபோட்டுக்கொண்ட கதையாக தான் நான் இதை பார்க்கின்றேன். திமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது. மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் பல நல திட்டங்களை திமுக செய்து வருகின்றனர்.



இதையெல்லாம் எதிர்கொள்ள தான் இத்தகைய வாக்குறுதிகளை வழங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என நான் கருதுகின்றேன். மேலும் இதெல்லாம் திமுக கூட்டணியை ஒருபோதும் பாதிக்காது என நான் நம்புகின்றேன் என்றார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil