மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் மாற்றுக் கழகத்தினர் தாய்க் கழகம் திரும்பும் விழாவில் முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
சகோதரர் ஓ.பி.எஸ்.
நம்முடைய அருமைச் சகோதரர் ஓ.பி.எஸ். அவர்களை இந்த மேடையில் பார்க்கும்போது, எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. 2008-இல், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நம்முடைய ஓ.பி.எஸ். அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தார்.
அப்போது, நவம்பர் 11-ஆம் தேதி, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, சட்டமன்றத்தில் நடந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், நம்முடைய ஓ.பி.எஸ். அவர்கள் பேசினார். மறுநாள் காலையில், முரசொலியில் என்ன ஹெட்லைன்ஸ் போட்டார்கள் தெரியுமா? "பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம்" என்று குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டார்கள்.
பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம்
நம்முடைய ஓ.பி.எஸ்-உம் முரசொலிசெய்தியைக் குறிப்பிட்டு, அவையில் பேசினார். உடனே தலைவர் கலைஞர் என்ன சொன்னார் என்றால், "பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம் அதற்காகக் கவலைப்படக் கூடாது. பச்சைத்தமிழர் என்று தந்தை பெரியார் அவர்கள் காமராசருக்குப் பட்டமே கொடுத்திருக்கிறார். அதைத்தான் முரசொலி கொடுத்திருக்கிறது. அதுவும் முரசு அடித்துக் கொடுத்திருக்கிறது" என்று தலைவர் கலைஞர் சொன்னார்.
இப்படி தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய ஓ.பி.எஸ் அவர்களின் ஸ்பெஷாலிட்டி என்ன என்று கேட்டால், எப்போதும் சிரித்த முகமாகத்தான் இருப்பார்.
சிரிப்பே ஒருகாலத்தில் பிரச்சினை
இப்போதுகூட பாருங்கள்... அதுதான் அவருடைய பண்பு! பொதுவாக, ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டால்தான் பிரச்சினை ஆகும்; ஆனால், நம்முடைய ஓ.பி.எஸ். அவர்களுக்கு அவருடைய சிரிப்பே ஒருகாலத்தில் பிரச்சினை ஆகிவிட்டது!
ஒருமுறை அவர் என்னைப் பார்த்து சட்டமன்றத்தில் சிரித்துவிட்டார். உடனே, ஸ்டாலினைப் பார்த்து ஓ.பி.எஸ். சிரித்துவிட்டார் என்று, ஏதோ, இரண்டு நாட்டுக்குள்ளே போர் வந்த மாதிரி பிரச்சினையாக ஆக்கிவிட்டார்கள்! அரசியலில், ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்;
குற்றச்சாட்டாக ஆக்கிவிட்டார்கள்
ஆனால், சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும்போது, நலம் விசாரித்துக் கொள்வது அரசியல் மாண்பு; அதுதான் பண்பாடு! அப்படித்தான், அப்போது முதலமைச்சராக இருந்த சகோதரர் ஓ.பி.எஸ். அவர்களைப் பார்த்து, மரியாதைக்காக வணக்கம் வைத்தேன். அவரும் சிரித்தார்.
உடனே இதைக் குற்றச்சாட்டாக ஆக்கிவிட்டார்கள். ஆனால், யார் என்ன சொன்னாலும், தன்னுடைய பண்பை மாற்றிக் கொள்ளாமல், அமைதியுடனும், அன்புடனும், அதே சிரித்த முகத்துடனும் இன்றைக்கும் இருக்கிறார் நம்முடைய ஓ.பி.எஸ். அவர்கள்.
விஸ்வாசம் = ஓபிஎஸ்
அமைதியும் - புன்னகையும் மட்டுமல்ல, ஓ.பி.எஸ். என்று சொன்னால், ஞாபகத்திற்கு வருகின்ற ஒரே சொல், "விஸ்வாசம்!" மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள், தான் அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில், நம்முடைய ஓ.பி.எஸ். அவர்களை இரண்டு முறை அமர வைத்தார்.
தன்னிடம் ஒப்படைத்த அரசாட்சியை, எந்தத் துரோகமும் இல்லாமல், திருப்பி ஒப்படைத்த நேர்மைக்குச் சொந்தக்காரர்தான் ஓ.பி.எஸ்.! அதனால்தான், அம்மையார் ஜெயலலிதா அவர்களே, சகோதரர் ஓ.பி.எஸ். அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
துரோகம் = ஈபிஎஸ்
விஸ்வாசத்துக்கு ஒரு ஓ.பி.எஸ். என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர்தான் பழனிசாமி அவர்கள். கூவத்தூரில், அம்மையார் சசிகலா காலில் ஊர்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சராகிவிட்டு, அந்த அம்மையாரை நோக்கியே, "நீ எனக்குப் பதவி பெற்று தந்தாயா?" என்று ஒருமையில் கேட்டவர்தான் பழனிசாமி அவர்கள். அவர் இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று நம்முடைய சகோதரர் ஓ.பி.எஸ். அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!
உச்சகட்ட துரோகம்
பழனிசாமி அவர்களைப் பொறுத்தவரைக்கும், தன்னை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வார். அவருடைய உச்சகட்ட துரோகம் என்ன தெரியுமா? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவாக்கி, அம்மையார் ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்திருக்கிறார் பழனிசாமி என்று ஸ்டாலின் பேசி இருந்தார்.

