Dailyhunt
வேதவதிக்கு திருமகள் செய்த திருவருள்!

வேதவதிக்கு திருமகள் செய்த திருவருள்!

Kalki Online 1 year ago
 திருமாலுக்கே மாமனார் ஆனவர்!

திருமலை என்றால் எப்படி ஸ்ரீனிவாச பெருமாள் மட்டும்தான் நம் நினைவிற்கு வருவாரோ, அப்படித்தான் திருச்சானூர் என்ற பெயரை கேட்டதுமே, 'ஆஹா...

அது பத்மாவதி தாயார் திருக்கோயில் கொண்டிருக்கும் தலமாயிற்றே' என்றே நமக்கு எண்ணத் தோன்றும். திருப்பதி பெருமாளின் திருவான அந்த பத்மாவதி தாயார், திருச்சானூரைத் தேடி வந்தமர்ந்ததே அவளின் திருவருளால்தான்.

வால்மீகி ராமாயணம் உத்தர காண்டத்தில், தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதியின் மகன், குஷத்வஜரை பற்றி குறிப்பிட்டிருக்கிறார் வால்மீகி. ஒரு நாள் குஷத்வஜர் வேதம் ஓதிக்கொண்டிருந்தபோது அந்த வேதமே ஒரு பெண் குழந்தையாக வடிவெடுத்து அவர் முன் வந்து நின்றது. அப்படி தோன்றிய அந்தக் குழந்தைக்கு 'வேதவதி' என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார் குஷத்வஜர்.

வேதவதி திருமணப் பருவத்தை எட்டியதும் அவளைத் திருமணம் செய்துகொள்ள அனைத்துத் திக்குகளிலிருந்தும் பலர் வந்து பெண் கேட்க, குஷத்வஜரோ தனது மகளை அந்தத் திருமாலுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து, பெண் கேட்டு வந்தவர்கள் அனைவரையும் அனுப்பி விட்டார். அப்போது ஷம்பூ என்ற ஒரு அரக்கன் வேதவதியை பெண் கேட்டு வர, மறுப்பு தெரிவித்த குஷத்வஜரை ஒரு இரவு வேளையில் அவன் கொன்றே விட்டான். தனது வளர்ப்புத் தந்தை இறந்து விட்டாலும், அவர் ஆசைப்பட்டதை தான் நிறைவேற்றியே தீர வேண்டும் என உறுதி கொண்ட வேதவதி, பற்பல ஆண்டுகள் அந்தத் திருமாலே தனக்குக் கணவராக வர வேண்டுமென்று கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள்.

வேதவதி தவம் செய்து கொண்டிருப்பதை, அவ்வழியே புஷ்பக விமானத்தில் வந்த ராவணன் ஏதேச்சையாக பார்த்து விட்டு நேராக வேதவதியிடமே வந்து, "நான் இலங்கை அரசன் ராவணன். பெண்ணே, உன்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்றான். வேதவதியோ, 'தான் அந்தத் திருமாலை மட்டுமே மணம் புரிந்து கொள்வேன்' என்று கூற, அதைக்கேட்டுக் கோபமுற்ற ராவணன், வேதவதியின் கூந்தலைப் பிடித்து இழுத்தான். வேதவதியின் தவ வலிமையால், அவளது கை அப்படியே கத்தியாக மாற, ராவணனின் கையில் இருந்த அவளது கூந்தலை அந்தக் கத்தி வெட்டியது.

"என்னைத் திருமாலுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றே எண்ணம் கொண்டிருந்தேன். எனது அன்புத் தந்தை அந்த உயரிய, தூய எண்ணத்தோடுதான் என்னை இத்தனை வருடங்கள் வளர்த்து வந்தார். நீ எனது கூந்தலை தொட்டு விட்டதால் என்னுடைய புனிதத் தன்மையை நான் இழந்து விட்டேன். இனி, நான் இப்படியே என்னை அந்தத் திருமாலுக்கு அர்ப்பணிப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை" என்று கூறிக்கொண்டே, தனது தவ வலிமையால் அக்னியை மூட்டி அந்த அக்னிக்குள் நுழைந்து விட்டாள் வேதவதி. அப்படி அக்னிக்குள் இருந்துகொண்டே, "ராவணா, நான் மீண்டும் வருவேன். உனது மரணம் என்பது என்னால்தான் உனக்கு ஏற்படப் போகிறது" என்று கூறிக்கொண்டே அந்த அக்னியில் ஐக்கியமாகி விட்டாள் வேதவதி.

அப்படி அக்னியில் சேர்ந்தவளே, ராமாயணக் காலத்தில் மீண்டும் தோன்றினாள் என்று ப்ரும்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது. வனவாசம் முடியும் சமயத்தில் ஸ்ரீராமரும் சீதையும் ஏகாந்தமாக இருந்த ஒரு பொழுதில், "சீதையே, இதோ ராவணன் வரப்போகிறான். அவன் வரும்போது நான் வளர்த்து வரும் ஹோத்ர அக்னிக்குள் சென்று ஒரு வருட காலம் நீ மறைந்துகொள். அந்த அக்னி குண்டத்திலிருந்து வேதவதி மாயா சீதையாக வந்து ராவணனின் முடிவிற்கு காரணமானவளாக இருப்பாள்" என்று கூறி, சீதையை அக்னியில் மறைய வைத்து, அந்த அக்னியில் ஏற்கெனவே மறைந்திருந்த வேதவதியை மாயா சீதையாக வரவழைத்து, ராவணணின் முடிவிற்கு காரணமாக வைத்தார்.

வேடுவப் பெண்ணாகத் தோன்றி திருவருள் செய்த செஞ்சு லட்சுமி!

ராவண வதம் முடிந்த பிறகு மீண்டும் அக்னிப் பிரவேசம் செய்ய வைத்து, அந்த வேதவதியை (மாயா சீதையை) அக்னிக்குள் செல்லச் சொல்லி, தன்னுடைய ஜானகி தேவியை மீண்டும் அதே அக்னியிலிருந்து வெளியில் வரும்படி சொன்னான் ஸ்ரீராமபிரான். திருமகளான சீதையும், அந்த சீதையின் திருவருளைப் பெற்று, வேத வடிவமான வேதவதியும் சேர்ந்தே அந்த அக்னியிலிருந்து வெளியே வந்தனர். திருமாலை மணமுடிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு இருந்த வேதவதியின் மனம் அறிந்த திருமகளான சீதை, ஸ்ரீராமரிடம் வேதவதியை மனைவியாக ஏற்கும்படி கூற, ஸ்ரீராமரோ, 'ராமாவதாரத்தில் தான் ஏக பத்தினி விரதனாக திருவவதாரம் செய்திருக்கிறேன். கலியுகத்தில் நிச்சயம் அவள் கரம் பிடிப்பேன்' என்று கூறினார். கலியுகம் பிறந்து பல வருடங்கள் ஆன பிறகும் பெருமாள் வேதவதிக்குக் கொடுத்த வாக்கை நினைக்காமலேயே இருக்கிறாரே என்று ஒரு நாள் பிருகு முனிவர் யோசித்தார்.

யோசித்தவர், திருமகளிடம் முறையிட்டு, அவள் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்தால்தான் திருமாலும் அடுத்த கட்டத்திற்குச் செல்வார் என்பதை நன்கு அறிந்து, வைகுண்டம் சென்று திருமாலின் திருமார்பில் குடியிருக்கும் அந்த திருமகளிடம், "பெருமாள் ராமாவதாரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் இருக்கிறாரே? உனது திருவருளுக்குப் பாத்திரமானவள் அல்லவா அந்த வேதவதி" என்று திருமகள் குடியிருக்கும் இடத்தில் (உதைத்து) கேட்டார். தான் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி பிருகு முனிவர் உதைத்ததும் அந்த முனிவரை கடிந்து பேசாமல் இருந்த திருமாலின் மீது கோபம் கொண்டு திருமகள் பூலோகம் வந்து தங்கிய இடமே கோலாபூர்.

கோமளவல்லி தாயாரின் அருள் பெற்ற லட்சுமி குமாரர்!

"திருமகளே, நீ என்னோடு வந்து திரும்பி சேர்ந்து விடு. இனியும் என்னை சோர்ந்து விழ வைக்காதே" என திருமால் கேட்க திருமகளோ, திருமாலை திருச்சுகனூர் (திருச்சானூர்) என்ற இடத்தில் தவம் செய்யச் சொன்னாள். திருமாலும் 12 வருடங்கள் திருமகள் தன்னோடு மீண்டும் சேர வேண்டுமென்று தவம் புரிய, திருமாலின் தவத்திற்கிணங்க கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமி தினத்தில் அவதாரம் செய்தாள் திருமகள். "திருமகளே, என் திருமார்பில் மீண்டும் வந்து நீ அமர்ந்து கொள்" என்று திருமலைவாசன் அழைக்க, "நீங்கள் அந்த வேதவதியை திருமணம் செய்து கொண்டால்தான் நான் மீண்டும் உங்கள் திருமார்பில் இடம் பிடிப்பேன்" என தாயார் அடம் பிடிக்க, அப்படி வேதவதியே பத்மாவதியாக அவதாரம் செய்து திருமலைவாசனை மணம் புரிந்த பிறகுதான் திருமகள் மீண்டும் திருமாலின் மார்பில் இடம் கொண்டாள் என்பது வரலாறு.

தன்னை முன்னிட்டு திருமால் வாக்குறுதி கொடுத்து விட்டார் என்றால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றும் வரை, தான் உறுதியாக இருந்து அவரை நிறைவேற்ற வைப்பேன் என்றல்லவா தம் திருவருளைக் காட்டி நமக்குச் சொல்கிறாள் திருமகள்?

திருமகள் திருவருளில் மென்மேலும் நனைவோம்.

(இந்தத் 'திருமகள் திருவருள்' தொடர் வெள்ளிதோறும் இடம்பெறும்.)

திருமகள் திருவருள் - அனைத்து அத்தியாயங்களையும் படிக்க 'Click Here'

Click Here
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online