Dailyhunt
தலைமுறை தலைமுறைக்கும் உடன் இருந்து அருள் செய்யும் திருமகள்!

தலைமுறை தலைமுறைக்கும் உடன் இருந்து அருள் செய்யும் திருமகள்!

Kalki Online 1 year ago
 வேதவதிக்கு திருமகள் செய்த திருவருள்!

ஸ்ரீமத் பகவத் கீதையில், 'தனக்கு நான்கு விதமான பக்தர்கள் இருக்கிறார்கள்' என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே அர்ஜுனனிடம் சொல்லி இருக்கிறார்.

'சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்தோ ஜிஞ்ஞா ஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப'

என்று பதினேழாவது அத்தியாயத்தில், "அர்ஜுனா, என்னிடம் வரக்கூடிய நான்கு விதமான பக்தர்களில் முதல் வகையானவர்கள் 'ஆர்த்த:' அதாவது, ஏகப்பட்ட மனக்கஷ்டங்கள், பணக்கஷ்டம், உடல் உபாதையினால் அவதிப்பட்டுக் கொண்டு அந்தக் கஷ்டங்களை நான் தீர்ப்பேன் என்ற நம்பிக்கையோடு வருபவர்கள். இரண்டாமவர், 'அர்தார்தீ:' அதாவது, எங்களுக்கு இன்னும் வேண்டும் என மென்மேலும் வேண்டும் என்ற வேண்டுதலோடு வருபவர்கள். மூன்றாமவர், 'ஜிஞ்ஞாஸு:' தங்களுக்கு ஆத்ம ஞானம் வேண்டும் எனக் கேட்டு வருபவர்கள். நான்காமவர்கள் 'ஞானி' எங்களுக்கு நீ மட்டுமேதான் வேண்டும் கிருஷ்ணா. வேறெதுவுமே வேண்டாம், வேறெதுவும் எங்களுக்குத் தேவையும் இல்லை. நீ எங்களோடு எப்பவும் இரு. அது எங்களுக்குப் போதும் என்றிருப்பவர்கள்" என்கிறார்.

கிருஷ்ணரின் திருவருளுக்கு அதிகப்படியாக பாத்திரமாகி இருக்கக்கூடியவர்கள் நிச்சயம் நான்காவது வகையைச் சார்ந்த பக்தர்களாகத்தானே இருக்க முடியும்? அப்படிப்பட்ட ஒரு மனோ நிலையில் நாம் திருமகளிடம் அதிகப்படியான அன்பை, பக்தியை அவளிடம் வைக்கும்போது அதிகப்படியான திருவருளை அவள் நிச்சயம் நம் மீது பொழிந்தருள்வாள்தானே? அப்படி கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொன்னபடி, திருமகள் மீது பக்தி கொண்ட ஒரு பக்தர் மீதும், ஞானியை போல திருமகள் அருளே தனக்கு வேண்டும் என்றிருந்த அந்த பக்தருக்கு திருமகள் எப்படித் திருவருள் புரிந்தாள் என்பதைப் பார்ப்போமா?

திருமகளை நாம் அழைக்க பெரிய பெரிய தவம் செய்ய வேண்டும், மிகச் சிறப்பான பூஜைகள் செய்ய வேண்டும் என்பதே இல்லை. எளிமையின் இருப்பிடமான அந்த மகாலட்சுமி தாயார் நம்மிடம் எதையுமே எதிர்பார்க்காமல் அருள்புரிபவள். தூய்மையான மனதோடு, 'எனக்கு வேறு கதியே இல்லை தாயே. நீதாம் மனம் இறங்கி வந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று மனம் உருகி, இரு கை குவித்து நின்றால் போதும், திருமகள் ஓடோடி வந்து விடுவாள்.

ஒரு ஊரில் மிகச் சிறந்த திருமகள் பக்தர் ஒருவர் இருந்தார். அவரது சிறு வயது முதலே அவர் தொடங்கிய எல்லா விஷயங்களிலும் திருமகளை மட்டுமே துணைக்குக் கொண்டு அவர் செய்த அத்தனை முயற்சிகளுமே அவருக்கு வெற்றியை துணையாகக் கொண்டு வந்து சேர்த்தன. ஏழ்மையின் பிடியில் இருந்து சிறிய முதலீடு கொண்டு அவர் தொடங்கிய வியாபாரம் அவரை மிகப்பெரிய பணக்காரராக மாற்றி விட்டது. திருமகள் தன்னோடு கூடவே இருப்பதால்தான் தன்னால் வெற்றியை எட்ட முடிந்தது என்பதை உணர்ந்த அவர், திருமகளை வழிபடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. நல்ல மனைவி, அருமையான மூன்று மகன்கள், அற்புதமான வீடு, நிம்மதியான மனம், நோயில்லா உடல் என இவை எல்லாமே திருமகளின் திருவருளால்தான் சாத்தியமானது அவருக்கு.

திருமாலுக்கே மாமனார் ஆனவர்!

அந்த வியாபாரி தன்னுடைய 82வது வயதை எட்டியபோது, ஒரு நாள் அவரது கனவில் திருமகள் தோன்றினாள். "பக்தனே, நீ இவ்வளவு நாட்கள் என்னை மிகவும் அன்பாக பூஜை செய்து, உனது வீட்டிலும், நீ வியாபாரம் செய்யும் இடத்திலும் என்னை மிகவும் அருமையாகப் பார்த்து கொண்டாய். நீ என் மீது காட்டிய அன்பில், அந்த பக்தியில் மனம் மகிழ்ந்து நான் உன்னோடு உனது இல்லத்திலும் உனது வியாபார இடமாகிய கடைகளிலும் உன்னோடு கூடவே இருந்து எனது திருவருளை உனக்குக் கொடுத்து வந்தேன்.

இனி, நீ இந்த பூலோகத்தை விட்டுக் கிளம்பும் நேரம் வந்து விட்டது. உனது ஆயுள் என்பது சிறிது நாட்களிலேயே முடியப்போகிறது. நீ இவ்வுலகை விட்டுப் போன பிறகு என்னை இவ்வளவு அன்பாக, சிரத்தையோடு யாரும் உனது வீட்டிலோ உனது கடையிலோ பூஜிக்க மாட்டார்கள். எனவே, நான் இந்த இடத்தை விட்டுக் கிளம்பி விடுகிறேன். ஆனால், இவ்வளவு ஆண்டுகள் என் மீது அலாதியான பக்தியை நீ காட்டியதால் ஒரே ஒரு வரம் கொடுத்து விட்டு நான் கிளம்புகிறேன். உனக்கோ உனது பிள்ளைகளுக்கோ என்ன வரம் வேண்டும் என்று கேள். கொடுக்கிறேன்" என்று சொல்லி விட்டு மறைந்து போனாள் திருமகள்.

வேடுவப் பெண்ணாகத் தோன்றி திருவருள் செய்த செஞ்சு லட்சுமி!

தான் கண்ட கனவின் தாக்கம் முழுமையாக மறையாத நிலையில், அந்த செல்வந்தர் தனது மூன்று மகன்களையும் அழைத்து, திருமகள் தனது கனவில் வந்து சொன்னதை சொன்னதும், அவரது முதல் மகன், "பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொன்னதைப் போல எனக்குப் பெரிய வீடு வேண்டும், நான்கு வேலையாட்கள் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும். இதை எல்லாம் திருமகள் வரமாகத் தருவாளா என்று கேள்" என்றான் தனது தந்தையிடம்.

கோமளவல்லி தாயாரின் அருள் பெற்ற லட்சுமி குமாரர்!

இரண்டாவது மகனோ, "அப்பா, நான் வியாபாரத்தை பெருக்கப் போகிறேன். அதனால் அதற்குத் தக்கபடி பெரிய இடத்தில் கடை கட்ட வேண்டும். ஒரு பெரிய மனை வேண்டும் என்று அந்த மகாலட்சுமி தாயாரிடம் வரமாகக் கேட்க முடியுமா?" என்று கேட்டான். சாதாரணமாக அதிகம் பேசாத மூன்றாவது மகன் தனது அப்பாவிடம் அமைதியாக வந்து, "இத்தனை வருடங்கள் நம்மோடு இருந்து நம்முடைய வெற்றிக்கெல்லாம் துணையாக இருந்த திருமகள் நமது வீட்டை விட்டுப் போகக் கூடாது. இங்கேயே இருக்க வேண்டும். தொடர்ந்து நமக்குத் திருவருள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே வரமாகக் கேளுங்கள் அப்பா" என்றான் மூன்றாவது மகன்.

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

மூன்றாவது மகனின் சொல் கேட்டு அந்தத் தந்தை மகிழ, அகில உலகத்துக்கே தாயான அந்தத் திருமகளும் மகிழ்ந்து, "இனி தலைமுறை தலைமுறைக்கும் உங்கள் இல்லத்தில் என்னை அழைத்து உங்கள் மகனும், உங்கள் பேரன், பேத்திகள் பூஜை செய்து கொண்டிருக்கும் வரை, என்னை உங்கள் குடும்பம் நினைத்து கொண்டிருக்கும் வரை உங்கள் இல்லத்தை விட்டு நான் போக மாட்டேன்" என்ற வாக்குறுதியை அளித்தாள் வளங்களின் மகளான திருமகள்.

அந்தத் திருமகளிடம், 'எங்களோடு எப்பவும் நீயே இரு தாயே' என்று நாமும் திருமகளை வேண்டி அவள் திருவருளை பெறுவோம் வாருங்கள்.

திரும்பவும் திளைப்போம் திருமகளின் திருவருளில்...

(இந்த திருமகள் திருவருள் தொடர் வெள்ளிதோறும் இடம்பெறும்)

திருமகள் திருவருள் - அனைத்து அத்தியாயங்களையும் படிக்க 'Click Here'

Click Here
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online